நடிகர் : கதிர்
நடிகை : ஓவியா
இயக்குனர் : விக்ரம் சுகுமாரன்
இசை : எம்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு : ராகுல் தருமன்
தேனி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. நாயகன் கதிரின் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி விஜி தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் அவரிடம் கோபித்துக் கொண்டு அவரை விட்டு பிரிந்து தன் பிறந்த வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார். அங்கு அவருக்கு ஆதரவாக அவருடைய அண்ணன் இருந்து வருகிறார்.
நாயகனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவள் தேனியில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறாள். அங்கு கேரளாவில் இருந்து படிக்க வரும் ஓவியாவும், இவளும் தோழிகளாக இருக்கின்றனர். ஓவியாவைப் பார்க்கும் நாயகன் பார்த்தவுடனே அவள்மீது விருப்பம் கொள்கிறார். இந்நிலையில், கல்லூரியில் ரேக்கிங் அதிகமாக இருப்பதால் வெளியில் தங்க முடிவெடுக்கும் ஓவியாவை தன் தங்கையின் உதவியுடன் தன்னுடைய வீட்டிலேயே தங்கவைக்கிறார்.
இந்நிலையில், நாயகனின் அப்பா திடீரென இறந்துபோகிறார். இவருடைய இறுதிச்சடங்கை நடத்துவதற்காக முதல் மனைவி விஜி மற்றும் அவளது அண்ணன் ஆகியோர் ஊர் பெரியவர்களிடம் பேசி தங்களுடைய வீட்டுக்கு அவரது உடலை எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.
தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நாயகனின் குடும்பத்தை அனுமதிக்க அவர்கள் மறுக்கிறார்கள். இந்நிலையில், முதல் மனைவி விஜியின் மகன் நாயகனின் குடும்பத்தின் மீது தனி பாசம் காட்டுகிறார். தன்னுடைய அப்பாவின் காரியத்தில் அவனை முன்னிறுத்தி கலந்துகொள்ள வைக்கிறார்.
இதனால் வெறுப்படைந்த விஜியின் அண்ணன் மகன்கள் அவனை வீட்டை விட்டு வெளியேறுமாறு தகராறு செய்கின்றனர். இதில், விஜியின் அண்ணன் மகன் ஒருவன் கொல்லப்படுகிறான். இதையடுத்து, நாயகன் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகிறான். தன்னுடைய மகன் நாயகனால் கொல்லப்பட்டதால் அவனை எப்படியாவது கண்டுபிடித்து பழிக்கு பழி வாங்கவேண்டும் என விஜியின் அண்ணன் முடிவெடுக்கிறார்.
இதற்காக நாயகனைத் தேடி தன்னுடைய மற்ற மகன்களை அனுப்பிவைக்கிறார். இறுதியில் அவர்கள் நாயகனை கண்டுபிடித்து பழிதீர்த்தார்களா? நாயகன் தன்னுடைய குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் கதிர் புதுமுகம் என்றாலும் கதைக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய கதாபாத்திரத்தை வளைத்துக் கொடுத்து நடித்து கதையை வலுப்படுத்தியிருக்கிறார். நாயகி ஓவியா கதாநாயகி என்பதற்காக மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறார். மற்றபடி, படத்தில் இவருடைய கதாபாத்திரத்திற்கு வலுவில்லை.
நாயகனின் அப்பாவுக்கு முதல் தாரமாக நடித்திருக்கும் ‘ஆரோகணம்’ விஜி தனது அனுபவ நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கோபத்தில் இவர் காட்டும் ஆக்ரோஷம் பயத்தை ஏற்படுத்துகிறது. விஜியின் அண்ணனாக வரும் ராமமூர்த்தி வில்லன் கதாபாத்திரத்திற்கு அழகாக பொருந்தியிருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
தனது முதல் படத்திலேயே கிராமத்துக் கதை களத்தை விறுவிறுப்பாகவும், நேர்த்தியாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். ஒரு சமூகத்துக்கிடையே நடைபெறும் மோதலை அச்சு மாறாமல் தெளிவாக காட்டியிருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கு இடம் கொடுக்காமல் விறுவிறுப்பாக கதையை நகர்த்துவதில் தனி முத்திரை பதித்திருக்கிறார்.
ராகுல் தருமன் படத்தின் கதைக்கேற்ப தன் வித்தியாசமான ஒளிப்பதிவினால் மேலும் விறுவிறுப்பை கூட்டியுள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அவ்வளவாக பேசப்படாவிட்டாலும் பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘மதயானைக்கூட்டம்’ மண்டியிடாத வீரம்
-----------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment